Friday 29 May 2015

சுற்றறிக்கை



 
நாள்: 20.05.2015

 நமது பகுதியின் நீராதாரமான செம்பாக்கம் ஏரியில் தற்பொழுது கழிவுநீர் விடப்படுவதால் விரைவாக மாசுபட்டு வருகிறது.  மேலும், இந்த ஏரியில் பல்லாவரம் நகராட்சியினர் இராட்சத கிணறு தோண்டி அதிலிருந்து நீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி லாரிகளின் வழியே தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர்.  இது குறித்து நமது சங்க நிர்வாகிகள் 16.03.2015 அன்று மாவட்ட ஆட்சியர், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) பொதுப்பணித்துறை - காஞ்சிபுரம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் – தாம்பரம் அவர்களுக்கு கடிதங்கள் நேரில் வழங்கியுள்ளனர்.  இது சம்மந்தமாக 22.03.2015 அன்று நம் பகுதியின் பிற நலச்சங்கங்களின் கூட்டத்தினை கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க  நமது கருத்துக்களை சுற்றறிக்கையின் வாயிலாக நமது பகுதிவாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

 நமது கோரிக்கைகளில் ஒன்றான ஏரியில் உடைக்கப்பட்ட கலங்களை கட்டி, புனரமைக்க நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் பரிந்துரைத்துள்ளதான தகவல் மன நிறைவு அளிப்பதாக உள்ளது. 

 இவ் ஏரியின் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வசிக்கின்ற இப்பகுதி மக்களுக்கு ஏரியை சுற்றி வேலி அமைத்துள்ளதை தொடர்ந்து, ஏரியை தூர் வாரி, கரைகளை உயர்த்தி, கழிவு நீர் விடப்படுவதை தடுத்து,  சுத்தமான நீரினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மீண்டும் சங்க நிர்வாகிகள் அரசு செயலாளர் - பொதுப்பணித்துறை, முதன்மை பொறியாளர் (நீர்வளம்) – சேப்பாக்கம் அவர்களுக்கு 05-04-2015 அன்று நேரில் சென்று கடிதங்கள் வழங்கினர். இதுகுறித்து ஏற்கனவே   மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும், சிட்லபாக்கத்திற்கு குடிநீர் தொடர்ந்து குழாய்கள் வழியே கிடைக்க எதாவது ஒரு திட்டத்தின்கீழ் விரைந்து செயல்படுத்தவும், விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தினை நம் பகுதிக்கு அமல்படுத்த வேண்டியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அலுவலகம், அரசு செயலாளர் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இயக்குனர் - பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியோருக்கும் நேரில் சென்று சங்க நிர்வாகிகள் நமது சங்க ஆலோசகர் திரு.சிவசாமி அவர்களுடன் 27-04-2015 அன்று கடிதங்கள் வழங்கினர்.

 குடிநீர் தொடர்ந்து குழாய் மூலம் வழங்காதது குறித்தும், உடன் வழங்க நடவடிக்கை எடுக்கவும், வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு விநியோகம் செய்யப்படாத நாட்களுக்கு கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் வேண்டி செயல் அலுவலர் - சிட்லபாக்கம் அவர்களுக்கு 07-04-2015 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்பொழுது நகரில் ஏற்கனவே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து R.O இயந்திரம் அமைத்து சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. எனினும் அதிலிருந்து வெளியேறும் நிராகரிக்கப்பட்ட நீரினை வீணாக்காமல் மறுசுழற்சி முறையில் உபயோகிக்குமாறும் பேரூராட்சி தலைவரிடம் நேரில்  தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நமது பகுதியின்  அனைத்து நலச்சங்கங்களையும் மீண்டும் 12.04.2015 அன்று கூட்டி,  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்பு நடத்திய மாரத்தான் தொடர் ஓட்டம் போல் ஏரியை சுற்றி ஒரு நடைபயணம் மேற்கொள்ளவும், ஊர் கூடி ஓவியம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

இவ் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பிற நலச் சங்கங்களுடன் சேர்ந்து நாம் தொடர்ந்த வழக்கில் 15.05.2015 முதல் குப்பைகளை ஏரிகளில் கொட்டக்கூடாது என நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர் எனும் தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் 06-05-2015 அன்று கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரம்) - பொதுப்பணித்துறை - சேப்பாக்கம் அவர்கள் நேரில் வருகை புரிந்து எரியினை ஆய்வு செய்து, ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்குமாறு சிட்லபாக்கம் பேரூராட்சி, செம்பாக்கம் மற்றும் பல்லாவரம் நகராட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏரிகளின் நிலை குறித்து கடந்த 14-05-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "உள்ளது உள்ளபடி" எனும் நிகழ்ச்சியில் நமது பகுதியின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இதனை "YOU TUBE” வலைதளத்தில் https://www.youtube.com/watch?v=nK9dYQw1zOw எனும் முகவரியில் காணலாம்.

எனவே நமது மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற நாம் அனைவரும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டுமெனவும், இதனைக் குறிக்கும் வகையில் தங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு கடிதம் மூலமாகவோ, ssnrassociation@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 M. ரவி
செயலாளர்
9841322473